திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.68 திருக்கடம்பூர்
பண் - காந்தாரம்
வானமர் திங்களும் நீரும் மருவிய வார்சடை யானைத்
தேனமர் கொன்றையி னானைத் தேவர் தொழப்படு வானைக்
கானம ரும்பிணை புல்கிக் கலைபயி லுங்கடம் பூரில்
தானமர் கொள்கையி னானைத் தாள்தொழ வீடெளி தாமே.
1
அரவினொ டாமையும் பூண்டு அந்துகில் வேங்கை யதளும்
விரவுந் திருமுடி தன்மேல் வெண்திங்கள் சூடி விரும்பிப்
பரவுந் தனிக்கடம் பூரிற் பைங்கண்வெள் ளேற்றண்ணல் பாதம்
இரவும் பகலும் பணிய இன்பம் நமக்கது வாமே.
2
(*)இளிபடும் இன்சொலி னார்கள் இருங்குழல் மேலிசைந் தேறத்
தெளிபடு கொள்கை கலந்த தீத்தொழி லார்கடம் பூரில்
ஒளிதரு வெண்பிறை சூடி யொண்ணுத லோடுட னாகிப்
புலியத ளாடை புனைந்தான் பொற்கழல் போற்றுதும் நாமே.

(*) இளி என்பது ஏழிசையில் ஒன்று.
3
பறையொடு சங்கம் இயம்பப் பல்கொடி சேர்நெடு மாடங்
கறையுடை வேல்வரிக் கண்ணார் கலையொலி சேர்கடம் பூரில்
மறையொலி கூடிய பாடல் மருவிநின் றாடல் மகிழும்
பிறையுடை வார்சடை யானைப் பேணவல் லார்பெரி யோரே.
4
தீவிரி யக்கழ லார்ப்பச் சேயெரி கொண்டிடு காட்டில்
நாவிரி கூந்தல்நற் பேய்கள் நகைசெய்ய நட்டம் நவின்றோன்
காவிரி கொன்றை கலந்த கண்ணுத லான்கடம் பூரில்
பாவிரி பாடல் பயில்வார் பழியொடு பாவ மிலாரே.
5
தன்புனல் நீள்வயல் தோறுந் தாமரை மேலனம் வைகக்
கண்புணர் காவில்வண் டேறக் கள்ளவி ழுங்கடம் பூரில்
பெண்புனை கூறடை யானைப் பின்னு சடைப்பெரு மானைப்
பண்புனை பாடல் பயில்வார் பாவமி லாதவர் தாமே.
6
பலிகெழு செம்மலர் சாரப் பாடலொ டாட லறாத
கலிகெழு வீதி கலந்த கார்வயல் சூழ்கடம் பூரில்
ஒலிதிகழ் கங்கை கரந்தான் ஒண்ணுத லாள்உமை கேள்வன்
புலியத ளாடையி னான்றன் புனைகழல் போற்றல் பொருளே.
7
பூம்படு கிற்கயல் பாயப் புள்ளிரி யப்புறங் காட்டில்
காம்படு தோளியர் நாளுங் கண்கவ ருங்கடம் பூரில்
மேம்படு தேவியொர் பாகம் மேவியெம் மானென வாழ்த்தித்
தேம்படு மாமலர் தூவித் திசைதொழத் தீய கெடுமே.
8
திருமரு மார்பி லவனுந் திகழ்தரு மாமல ரோனும்
இருவரு மாயறி வொண்ணா எரியுரு வாகிய ஈசன்
கருவரை காலில் அடர்த்த கண்ணுத லான்கடம் பூரில்
மருவிய பாடல் பயில்வார் வானுல கம்பெறு வாரே.
9
ஆடை தவிர்த்தறங் காட்டு மவர்களும் அந்துவராடைச்
சோடைகள் நன்னெறி சொல்லார் சொல்லினுஞ் சொல்லல கண்டீர்
வேடம் பலபல காட்டும் விகிர்தன்நம் வேதமு தல்வன்
காடத னில்நட மாடுங் கண்ணுத லான்கடம் பூரே.
10
விடைநவி லுங்கொடி யானை வெண்கொடி சேர்நெடு மாடங்
கடைநவி லுங்கடம் பூரிற் காதல னைக்கடற் காழி
நடைநவில் ஞானசம் பந்தன் நன்மையா லேத்திய பத்தும்
படைநவில் பாடல்ப யில்வார் பழியொடு பாவ மிலாரே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com